தென் மண்டல மருந்து அருங்காட்சியகம் விரிவாக்கம்: தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் விரைவில் திறப்பு

சென்னை : ”தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் உள்ள, தென்மண்டல மருந்து பொருள் அருங்காட்சியகத்தை, புதிதாக கட்டப்பட்டு வரும் புறநோயாளிகள் பிரிவில், விரிவாக்கம் செய்து அமைக்க ஏதுவாக, 5 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தரவு தளம் கட்டப்பட்டு வருகிறது,” என, நிறுவன இயக்குனர் மீனாகுமாரி தெரிவித்து உள்ளார்.

தாம்பரம், சானடோரியத்தில், தேசிய சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இது, தேசிய அளவில், ‘ஆயுஷ்’ மருத்துவத்தை ஊக்குவிக்கும், ஏழு கல்வி நிறுவனங்களில் ஒன்று.பொது மருத்துவம், குணபாடம், வர்மம், யோகம் உட்பட, சிறப்பு மருத்துவங்களும்; குழந்தை மருத்துவம், நோய் நாடல், நஞ்சு நுால் மருத்துவம் உட்பட, எட்டு நோய்களுக்கு, இங்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இவற்றின் கீழ், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படுகிறது; அதற்கு, 10 கவுன்டர்கள் செயல்படுகின்றன. புறநோயாளிகள் பிரிவு காலை, 8:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை செயல்படுகிறது.

31.65 கோடி ரூபாய்

நிதிகுறைந்த கட்டணத்தில், தரமான மருத்துவம் அளிக்கப்படுவதால் தினசரி, 2,200 பேரும்; வார இறுதி நாட்களில், 2,500 பேரும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். கூட்ட நெரிசலை தடுக்கவும், தரமான சிகிச்சை வழங்கவும், புறநோயாளிகள் பிரிவுக்கு புதிய கட்டடம் கட்ட, மருத்துவமனை நிர்வாகம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இதையடுத்து, 2016ல் மத்திய அரசு, 31.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. தற்போது, கட்டுமான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. அங்கு பெரிய அளவிலான, தென் மண்டல மருந்து பொருட்கள் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளும் துரிதமாக நடந்து வருகின்றன.

தர நிர்ணய சான்று

இது குறித்து, நிறுவன இயக்குனர் மீனாகுமாரி கூறியதாவது:மருத்துவமனையில் பயிற்றுவிக்கப்படும் எம்.டி., பட்டமேற்படிப்பு, பிஎச்.டி., படிப்புடன், புதிதாக சித்த மருத்துவ பட்டபடிப்புகளையும், அறுவை, தோல், சூல் மகளிர், சித்த மருத்துவ அடிப்படைகள் ஆகிய நான்கு பட்ட மேற்படிப்புகளையும் அறிமுகப்படுத்த, ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இதனுடன், நிறுவனத்திற்கு, நிகர்நிலை பல்கலை அந்தஸ்து பெறவும், மேற்படிப்பு கல்வி நிறுவனங்களுக்கான, தர நிர்ணய சான்று பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தவிர, ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மருத்துவ தாவரங்கள் குழு அமைப்பு சார்பில், 2020 அக்டோபரில், இங்கு, சிறிய அளவில் நிறுவப்பட்ட தென் மாநிலங்களுக்கான மண்டல மருந்து பொருள் அருங்காட்சியகத்தை, விரிவுபடுத்தும் பணியும் நடந்து வருகிறது.இப்பணிகள், தேசிய மருத்துவ தாவரங்கள் குழு அமைப்பின் நிதியால், 5 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற உள்ளது. இந்த மண்டல மருந்து பொருள் அருங்காட்சியகம், முதன்மை நிறுவனமாகவும், இதனுடன், ராயபுரம், யுனானி மருத்துவத்தின் மண்டல ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அரும்பாக்கம் சித்த மருத்துவத்தின் மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணை நிறுவனங்களாகவும் செயல்பட உள்ளன.

மூலிகை தாவரங்கள்

தமிழகம், அந்தமான், கர்நாடகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய ஆறு மாநிலங்களில், அமுக்கரா உட்பட, 500 வகையான மூலிகை தாவரங்கள் சேகரிக்கப்படும்.அதன் மூல பொருட்களின் தன்மை, இயல்பு, மருத்துவ பண்புகள், வளரியல்பு, சாகுபடி தொழில் நுட்பங்கள், தட்ப வெப்ப நிலை மாற்றங்கள் குறித்த தகவல் அனைத்தும் ஆராயப்பட்டு, புதிதாக கட்டப்பட்டு வரும் புறநோயாளிகள் பிரிவின், இரண்டாவது தளத்தில் அமைய உள்ள, பெரிய தரவுதளத்தில் சேகரித்து வைக்கப்பட உள்ளன.

இவற்றுடன், சித்த மருத்துவத்தில், தீவிர நோய்களுக்காக பொதுவாக பயன்படுத்தப்படும், முக்கிய மூலிகைகளின் தன்மையும் ஆராயப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளன.இது, சர்வதேச அளவில் உள்ள டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி, தாவரவியல், தொழில்நுட்ப வல்லுனர்கள், மருத்துவ மற்றும் கல்லுாரி மாணவர்களின் ஆராய்ச்சிக்கும், கல்விக்கும் பெரிதும் பயனாக அமையும்.விவசாயிகளின் மூலிகை சாகுபடிக்கு, உதவிகரமாக அமைவதுடன், ஆராய்ச்சி மற்றும் சித்த மருத்துவ கல்வி சார்ந்த துறையில், ஒரு முக்கிய அங்கமாக அமையும்; புறநோயாளிகள் பிரிவும், தரவுதளமும் விரைவில் திறக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Source : https://www.dinamalar.com/news_detail.asp?id=2864420